Breaking News

குவைத்தில் நடைபெற்ற காயிதே மில்லத் ஆவணப்பட வெளியீட்டு விழா

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
0

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணப்பட வெளியீட்டு விழா குவைத்தில் எழுச்சியோடும், சிறப்போடும் நடைபெற்றது. கடந்த 08.01.2015 அன்று குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்)இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. முஸ்லிம் லீக் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள காயிதே மில்லத் ஆவணப்படத்தை ஆளூர் ஷா நவாஸ் இயக்கியுள்ளார்.

ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் முதன் முறையாக குவைத் வந்தபோது ‘இளம் ஊடகப் போராளி’என்ற விருதையும், 10ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) விழாவில் ‘ஆவணப்பட ஆளுநர்' என்ற விருதையும் வழங்கி குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சிறப்பித்துள்ளது.


அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் இந்திய குவைத் நட்புறவு மன்றம், குவைத் கேரள ஃபிரண்ஷிப் சொஸைட்டி, முஸ்லிம் கலாச்சார மையம், குவைத் விடுதலை சிறுத்தைகள் கட்சி, குவைத் தமிழோசை கவிஞர் மன்றம், இஸ்லாமிய வழிகாட்டி மையம், தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.


இந்த ஆவணப்படத்தை குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) வெளியிடுவதற்கான காரணங்களையும், அவசியத்தையும், காயிதே மில்லத் அவர்களின் வரலாறு குவைத் வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பேராவலை நிறைவேற்றுவதற்காக சங்கம் பாடுபடுவதையும் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.


கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பட வெளியீட்டிற்கு முன், சிறப்புரையாற்றிய ஆளூர் ஷாநவாஸ் தன்னுடைய உரையில், இப்படம் வெளியாக தான் பட்ட கஷ்டங்களை விவரித்தார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்டோரின் வாழ்வை விளக்கும் படங்கள் உள்ளபோது காயிதே மில்லத்துக்கென்று ஆவணங்கள் ஏதும் இல்லாததே தாம் இப்படம் எடுக்க உந்து சக்தியாக இருந்தது என்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த இந்தியாவும் காவிக்கு சிவப்பு கம்பளம் விரித்தபோது தமிழகம் மட்டும் விதிவிலக்காக இருந்ததற்கு பெரியார் பிறந்த மண் என்பது மட்டும் மாத்திரமல்ல, காயிதே மில்லத் போன்றோர்கள் பிற சமய, அரசியல் தலைவர்களோடு நெருங்கி பழகியதோடு அவர்கள் மூலம் இஸ்லாத்தை பேச வைத்ததும் காரணம் என்றார். அண்ணா, பெரியார், ராஜாஜி, மபொசி என எல்லோருடனும் அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தப்பட்ட காயிதே மில்லத்தின் வரலாறு இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் என்று கூறினார்.


குவைத்தில் இயங்கும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சமூக சேவகர்கள், சமுதாய ஆர்வலர்கள் முன்னிலை வகிக்க கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆவணப்பட குறுந்தகடை ஆளூர் ஷா நவாஸ் வெளியிட, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் தலைவர்மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ பெற்று கொண்டார். பின் ஆவணப்படம் திரையிடப்பட்டது.


நிகழ்ச்சியை பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மது பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். துணைத்தலைவர் மவ்லவீ எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் வரவேற்புரையாற்ற, இணைப் பொருளாளர் ஹச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்றினார்.


குவைத்தில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும்சகோதர சமுதாய பெருமக்களும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் இந்த குறுந்தகடுகள் இலவசமாக வழங்கப்பட்டன. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

Share this