Breaking News

சிலிண்டர் டெலிவரி பாய்க்கு பணம் தர வேண்டாம்

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
0
கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும்போது பணம் கொடுக்க தேவையில்லை. கட்டாயப்படுத்தினால் புகார் தெரிவிக்கலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
சமையல் கியாஸ் நேரடி மானியம் திட்டம் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் முழு தொகை கொடுத்து சிலிண்டரை பெற வேண்டும். மானியம் பொதுமக்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், கியாஸ் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது.
 
வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்தால் டெலிவரிபாய் வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது, ரூ.50 கொடுத்தால் தான் சிலிண்டர் வழங்குவோம் என்று டெலிவரிபாய் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்துகிறார்கள். தரை தளத்தில் உள்ள வீடுகளாக இருந்தால் ரூ.30ம், அடுக்குமாடி குடியிருப்புகளாக இருந்தால் ரூ.50ம் கட்டாயம் தர வேண்டும் என்று அந்த ஊழியர்கள் பிடிவாதமாக கேட்கிறார்கள். அப்படி அவர்கள் கேட்கும் பணத்தை தராவிட்டால் வாக்குவாதம் செய்துவிட்டு மீண்டும் சிலிண்டரை திரும்ப எடுத்து சென்று விடுகிறார்கள்.
 
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி வெற்றி செல்வகுமார் கூறும்போது, ''கியாஸ் விநியோகம் செய்யும் பையன்களுக்கு ‘டிப்ஸ்’ எதுவும் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு விநியோகஸ்தர்கள் சம்பளம் வழங்குகிறார்கள். வாடிக்கையாளர்களே முன்வந்து கொடுப்பது அவர்களது விருப்பம். ஆனால், ரூ.30, 40, 50 என நிர்ணயம் செய்து கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடுவது தவறு. அதனை அனுமதிக்க கூடாது.
 
கட்டாயப்படுத்தி பணம் கேட்டால் கியாஸ் ஏஜென்சியின் பெயர், ஏரியா, விவரங்களை போன் மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ தெரிவிக்கலாம். புகார் கொடுப்பவரும் தங்களது பெயர் விவரங்களை கூற வேண்டும். அப்போதுதான் தவறு செய்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் தேனாம்பேட்டையில் இதற்காக சேவை மையம் செயல்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும நேரத்தில் பொது மக்கள் நேரிலும் வந்து எழுத்து மூலம் புகார் கொடுக்கலாம்.
 
இது தவிர 11800 425247247 என்ற இலவச டெலிபோன் மூலமாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம். புகாரின் அடிப்படையில் அந்த கியாஸ் ஏஜென்சி மீதும், ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொது மக்கள் சிலிண்டர் விநியோகத்தின் போது கூடுதலாக பணம் கேட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

Share this